ஏ.டி.எம் எந்திரத்தில் “ஸ்கிம்மர்” கருவி…. மாட்டி கொண்ட ஜவுளி வியாபாரி…. வெளியான பரபரப்பு தகவல்கள்….!!!!


சென்னை மயிலாப்பூர் சாந்தோம் நெடுஞ்சாலையில் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்திலுள்ள ஏ.டி.எம். எந்திரம் பழுதானபோது அதை வங்கி ஊழியர்கள் சரிபார்க்க சென்றனர். இந்நிலையில் அங்கு இருந்த எந்திரத்தில் வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். கார்டுகளிலுள்ள தகவல்களை திருடுவதற்காக பயன்படுத்தும் “ஸ்கிம்மர்” கருவி பொருத்தப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் இது தொடர்பாக மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது விசாரணையில் சென்னை பழைய வண்ணாரப் பேட்டையை சேர்ந்த மனோகர் (58) மற்றும் அவருடைய மகன் ஆனந்த் ஆகிய 2 பேரும் ஏடிஎம் எந்திரத்தில் “ஸ்கிம்மர்” கருவியை பொருத்தியது தெரியவந்தது.

அதன்பின் மனோகர் கைது செய்யப்பட்டார். பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதாவது, வண்ணாரப்பேட்டை பகுதியில் மனோகர் ஜவுளிக்கடை நடத்தி வந்தார். இவருக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதன் காரணமாக மனோகர் நிதி நெருக்கடியில் சிக்கித்தவித்தார். அவரது மகன் ஆனந்த் அல்பேனியா நாட்டில் எம்.பி.பி.எஸ். பயின்று வந்தார். இதற்கிடையில் மனோகருக்கு தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ஆனந்த் மருத்துவ படிப்பை தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இதனால் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு அவர் இந்தியா திரும்பினார். அதனை தொடர்ந்து ஆனந்த் டெல்லியிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அந்நிறுவனத்தில் உள்ள தொடர்புகள் வாயிலாக “ஸ்கிம்மர்” கருவி ஆனந்துக்கு கிடைத்தது. அதன்பின் சென்னை வந்த ஆனந்த் தன் தந்தையுடன் அந்த வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் “ஸ்கிம்மர்” கருவி பொருத்தியது தெரியவந்தது. இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான ஆனந்த் தலைமறைவாக இருக்கிறார். அப்போது அவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். அவர் பிடிபட்ட பிறகே வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்ற விவரம் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.