தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்திடுங்க…. ஐகோர்ட்டில் எடப்பாடி மேல் முறையீடு….!!!!


எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று உத்தரவிட்ட தனிநீதிபதியின் உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் முறையீடு செய்யப்பட்டிருக்கும் அந்த மனுவில், சென்ற ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக் குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாகவும், பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்தை புறக்கணித்து கட்சியின் செயல்பாட்டை தடுக்கும் விதமாக தனி நீதிபதியின் தீர்ப்பு இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

முன்னதாக பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கியது மட்டுமின்றி அவர் வகித்த பதவியும் கலைக்கபட்டு விட்டதாகவும், அதிமுகவின் பெரும்பான்மையினர் விருப்பத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கட்சியின் நிர்வாகம் குறித்த விவகாரங்களில் நீதிமன்றம் கருத்து தெரிவிக்க எந்த அதிகாரவரம்பும் இல்லை. அத்துடன் தனி நீதிபதியின் தீர்ப்பு கட்சி செயல்பாட்டில் மட்டுமின்றி பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்தில் தலையிடும் விதமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சி ஒற்றை தலைமையை நோக்கி போகும் நிலையில், இரட்டை தலைமை வேண்டும் என்ற ஒரு தனி நபரின் விருப்பத்தை பிரச்சாரம் செய்யும் விதமாக இத்தீர்ப்பு அமைந்து இருப்பதாகவும், உட்கட்சி செயல்பாடு பற்றி நீதிமன்ற ஆய்வுசெய்ய முடியாது என்றும் மேல் முறையீட்டு மனுவில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக் குழுவை எதிர்த்த வழக்கில் கேட்கப்படாத கோரிக்கைகளுக்கு நிவாரணமாக ஜூன் 23ம் தேதிக்கு முன் உள்ள நிலையே தொடர வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளதால், இத்தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நடைபெற்று முடிந்த பொதுக் குழுவுக்கு எதிரான இத்தீர்ப்பு சட்டப்படி ஏற்றுக்கொள்ளதக்கதல்ல. அந்த வழக்கு செல்லாததாகிவிட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எனும் முறையில் கட்சிக்கு எதிராக பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்திருக்க வேண்டும். அத்துடன் பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகளில் கட்சியினர் அதிருப்தியில் உள்ளதாகவும் ஒற்றை தலைமை வேண்டும் என திடீரென்று முடிவெடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற தனி நீதிபதியின் தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்ககோரி நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர்மோகன் அமர்வில், எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் முறையிட்டார். இதனிடையில் வழக்கு எண்ணிடப்பட்டால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபடும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளதால் அடுத்த வாரம் இவ்வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.