பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாணவ-மாணவிகளுக்காக புதிய திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.
திருச்சியில் உள்ள அரசு சையது முர்துசா மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிகளில் வாசிப்பு இயக்கம் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு பள்ளிகளிலும் நூலகங்கள் திறக்கப்படும். அதன் பிறகு பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்புக்கும் வாரம் ஒரு முறை நூலகத்தில் படிப்பதற்கு கால அவகாசம் ஒதுக்கப்பட்டு, மாணவர்களுக்கு தனி தனியே ஒரு புத்தகம் வழங்கப்படும். இந்த புத்தகங்களை மாணவர்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்று படித்து முடித்த பிறகு, நூலகத்தில் புத்தகத்தை வைத்துவிட்டு வேறொரு புத்தகத்தை எடுத்துக் கொள்ளலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு மாணவர்கள் தங்களுடைய வாசிப்பு திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த திட்டத்தின்படி 6-8, 9-10, 11-12 என மாணவர்கள் 3 குழுக்களாக பிரிக்கப்படுவார்கள். இதனையடுத்து மாணவர்கள் ஒரு புத்தகத்தை முழுமையாக படித்து முடித்த பிறகு அதிலிருந்த தகவல்களை சேகரித்து குறு ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தல், புத்தகம் தன் கதை கூறுதல், கதாபாத்திரங்களை மதிப்பீடு செய்தல், மேற்கோள்கள் குறிப்பிடுதல், புத்தக ஒப்பீடு, நூல் அறிமுகம், நாடகம், ஓவியம் வரைதல் மற்றும் விமர்சனங்கள் போன்றவற்றை எழுதலாம். இவைகள் பள்ளியில் சேகரிக்கப்பட்டு சிறந்த மாணவர்களின் படைப்புகள் தேர்ந்தெடுக்கப்படும். அப்படி தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் வட்டார அளவிலான போட்டிகள், மாவட்ட அளவிலான போட்டிகள் மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை பெறலாம்.
ஒரு மாவட்டத்திற்கு 3 மாணவர்கள் வீதம் மொத்தம் 114 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அண்ணா நூற்றாண்டு கழகத்தில் வைத்தும் நடைபெறும் முகாமில், சிறந்த எழுத்தாளர்கள் மற்றும் பேச்சாளர்களைக் கொண்டு அமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு, குழந்தை எழுத்தாளர்களுடன் மாணவர்கள் கலந்துரையாடுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படும். இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகள் அரசு சார்பில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா அனுப்பப்படுவார்கள். இந்த பயணத்தின் போது மாணவ-மாணவிகள் சிறப்பு வாய்ந்த நூலகங்கள் மற்றும் ஆவண காப்பகங்கள் போன்றவற்றை காணலாம். எனவே மாணவ-மாணவிகள் புத்தக வாசித்தல் திறனை மேம்படுத்திக் கொண்டு, அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை கூறியுள்ளது.
Post Views:
0