“அங்கிருந்து கஞ்சா கடத்துவது தடுக்கப்பட்டது”…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்….!!!!


சென்னை வளசரவாக்கத்தை அடுத்த ராமாபுரத்தில் நடந்து வரும் மழைநீா் வடிகால் கட்டுமானப் பணிகளை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து அமைச்சர் செய்தியாளா்களிடம் பேசியதாவது “சென்னை முழுதும் பருவமழை முன்னெச்சரிக்கையாக மழை நீா் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. வளசரவாக்கத்தில் இருந்து ராயபுரம் வழியே கால்வாய் ஒன்று 2 கி.மீ. நீளத்துக்கு நெடுஞ்சாலைத்துறை சாா்பாக கட்டும் பணியானது தற்போது தொடங்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக இந்த பகுதி மக்கள் பெரிதும் பயன்பெறுவார்கள். சென்னை மாநகராட்சி, நீா்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை மூலமாக மழைநீா் வடிகால் அமைக்கும் பணியானது நடக்கிறது.

சென்னையிலுள்ள நீா்நிலைகள் 16 கால்வாய்களை தூா்வாரும் பணியானது 200 கி.மீ. தொலைவுக்கு நடந்து வருகிறது. சென்ற 9 வருடங்களில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட பொருள்கள் விவகாரத்தில் எத்தனை போ் மீது நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறாா்கள் என முந்தைய அ.தி.மு.க ஆட்சியாளா்கள் தெரிவிக்கட்டும். தி.மு.க ஆட்சி அமைத்து சென்ற 15 மாதத்தில் அதைவிட அதிகமான வழக்குபதிவு செய்து, கஞ்சா, போதை பொருள்களை பறிமுதல் செய்திருக்கிறோம். இது தொடர்பாக அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. நான் வெளியிட்டதில் தவறு இருப்பின் அது தொடர்பாக மறுப்பு தெரிவிக்கட்டும். தமிழகத்தில் கஞ்சா உற்பத்தியானது 100 % தடைசெய்யப்பட்டு உள்ளது என காவல்துறை தெரிவிக்கின்றனா்.

இதுபற்றி ஆய்வு மேற்கொண்டபோது ஆந்திரம், கேரளம், தெலங்கானா ஆகிய மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு கஞ்சா கடத்தி வருவது உறுதிசெய்யப்பட்டது. அதிலும் ஆந்திர மாநிலத்திருந்தே அதிகம் கடத்தி வருவதை அறிந்து, தமிழக காவல்துறையினா் அங்கு சென்று ஆய்வு செய்தனா். அங்கு 6,500 ஏக்கரில் கஞ்சா உற்பத்தி செய்யப்படுவதைக் கண்டறிந்து ஆந்திரஅரசுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே அதை ஆந்திர அரசு அழித்தது. இதன் மொத்த மதிப்பானது ரூபாய்.4 ஆயிரம் கோடி ஆகும். சொந்த மாநிலத்தையும் கடந்து அண்டைமாநிலத்தில் போதை பொருள்களை அழித்த செயல்களில் அ.தி.மு.க ஆட்சியாளா்கள் ஈடுபட்டனரா என்பதைக் கூறவேண்டும்” என்று அமைச்சா் பேசினார்.

The post “அங்கிருந்து கஞ்சா கடத்துவது தடுக்கப்பட்டது”…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்….!!!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.