கனியாமூர் பள்ளி விவகாரம்….. கண்ணீரில் தவிக்கும் பெற்றோர்கள்…. டி.ஜி.பிக்கு விடுத்த கோரிக்கை….!!!!


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்த ஸ்ரீமதி என்ற மாணவி உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கலக்கத்தை ஏற்படுத்திய நிலையில், பள்ளியில் வெடித்த வன்முறையின் காரணமாக 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்படி கைது செய்யப்பட்டவர்கள் மீது பல்வேறு விதமான வழக்குகள் போடப்பட்டு அவர்கள் துன்புறுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் வன்முறையில் ஈடுபட்டவர்களில் பலர் குற்றமற்றவர்கள் என்றும், வன்முறை முடிந்த பிறகு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு படிக்க சென்றவர்கள், வேலைக்கு சென்றவர்கள், பெட்ரோல் போட சென்ற அப்பாவி இளைஞர்கள் பலரை கைது செய்து வைத்திருப்பதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவை சந்தித்து மனு கொடுக்க சென்றனர்.

அப்போது மனுதாரர்களின் தரப்பில் வக்கீல் மில்டன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் வன்முறை முடிந்த பிறகு மாணவர்கள், வேலைக்கு சென்றவர்கள், பெட்ரோல் போட சென்றவர்கள், மருத்துவமனைக்கு சென்றவர்கள் மற்றும் ஆங்காங்கே சுற்றி திரிந்தவர்களை சம்பந்தமில்லாமல் காவல்துறையினர் கைது செய்து வைத்துள்ளனர் என்றார். இதில் குறிப்பாக தலித்துகள், வன்னியர்கள் மற்றும் குரும்பர்கள் என ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை கைது செய்து வைத்துள்ளனர்.

இதனையடுத்து மேல் ஜாதியை சேர்ந்த சிலரை காவல்துறையினர் விடுவித்துள்ளனர் என்றும், ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகிறது என்றும் கூறினார். எனவே அப்பாவிகளை விடுதலை செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்றார். மேலும் கைது செய்யப்பட்ட இளைஞர்களின் பெற்றோர்கள் காவல்துறையினர் காண்பித்த சிசிடிவி ஆதாரங்கள் மற்றும் சான்றிதழ்கள் போன்றவற்றில் நேரத்தை காண்பித்தார்கள்.

அதில் எங்கள் மகனுக்கும் கலவரத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. இது தொடர்பாக நீதிமன்றம், காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் என பலரை சந்தித்து மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று கூறிவிட்டனர். எங்கள் பிள்ளைகளை போலீசார் அடித்து துன்புறுத்துகின்றனர்.

எங்கள் பிள்ளைகளை நம்பி தான் எங்கள் வாழ்வாதாரமே இருக்கிறது அவர்களை அடித்து முடக்கி விட்டால் எங்கள் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி விடும் என்று கண்ணீர் மல்க பெற்றோர்கள் கூறினார். மேலும் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் கனியாமூர் பள்ளி கலவரத்தில் தலையிட்டு உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.