கமுதி அருகே முற்கால பாண்டியர் மன்னர் கால சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி தாலுகாவிற்கு உட்பட்ட முஷ்டக்குறிச்சி கிராமத்தில் பழமையான நடுகல் சிற்பம் இருப்பதாக வரலாற்று ஆய்வாளர் சக்திபாலன் என்பவர் வரலாற்று ஆய்வாளர்களுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வரலாற்று ஆய்வாளர் செல்வம், தேவாங்கர் கலைக்கல்லூரி வரலாற்றுத் துறை உதவி பேராசிரியர் ரமேஷ் உள்ளிட்டோர் நேரில் சென்று சிற்பத்தை ஆய்வு செய்தார்கள்.
இது குறித்து அவர்கள் கூறியுள்ளதாவது, இந்த நடுக்கல் சிற்பமானது முற்கால பாண்டியர் காலத்தை சேர்ந்தது. ஒரே பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக வடிக்கும் கலாச்சாரம் தெற்கில் பாண்டிய நாட்டிலும் வடக்கில் பல்லவ நாட்டிலும் பரவி இருந்தன. இந்த நடுக்கல் அரச மகளிர் அல்லது ஒரு உயர் குடி பெண்ணிற்காக எடுக்கப்பட்டதாகும்.
பெண்ணின் உருவம் வலது கையில் ஏதோ ஒரு பொருள் ஒன்றை வைத்திருப்பது போல் செதுக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் சிற்பம் சிதைவடைந்ததால் அது என்னவென்று தெளிவாக தெரியவில்லை. இந்தச் சிற்பத்தின் உயரம் 2 1/2 அடி, அகலம் 1 1/2 அடி. இந்தச் சிற்பத்தின் காலம் 9 முதல் பத்தாம் நூற்றாண்டாக இருக்கலாம். மேலும் இது மிகவும் அபூர்வமானதாகும். இவற்றை பாதுகாப்பது நமது ஒவ்வொருவரின் கடமை என கூறியுள்ளார்கள்.
Post Views:
0