இணையவழி சூதாட்டத்தை தடைசெய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர், அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தர்மபுரிக்கு வருகை புரிந்தார். அவருக்கு அ.தி.மு.க அமைப்புச் செயலர், தருமபுரி மாவட்டச் செயலர் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ தலைமையில் அ.தி.மு.க-வினர் வரவேற்பு அளித்தனர். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது, இணையவழி சூதாட்டம் இளைஞர்களின் எதிர் காலத்தை கேள்விக்குறியாக்கி, அவர்களின் வாழ்வை பாதிக்கிறது. இதனால் இந்த சூதாட்டத்தை தமிழ்நாடு அரசு உடனே தடைசெய்ய வேண்டும். சூதாட்டத்தை தடைசெய்வதற்கு மக்களிடம் கருத்துக் கேட்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆனால் இது சரியல்ல.
அதை தடைசெய்வதுதான் சரியான நடவடிக்கையாக இருக்கும். தமிழகத்தில் சட்டஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது. தமிழகம் எங்கும் போதைப்பொருள்கள் தாரளமாக கிடைக்கிறது. இதை கட்டுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மின்கட்டணம் உயர்வு, சொத்துவரி உயர்வு போன்றவை மக்களை வெகுவாக பாதிக்கிறது. தி.மு.க அரசுக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை. தருமபுரியில் அ.தி.மு.க ஆட்சி காலத்தில் துவங்கப்பட்ட எண்ணேகோல் புதூர் தும்பலஅள்ளி அணை இணைப்புக் கால்வாய் திட்டம், அலியாளம் முதல் தூள்செட்டி ஏரி வரையிலான இணைப்புக் கால்வாய் திட்டம் போன்ற திட்டங்கள் மந்தகதியில் நடைபெறுகிறது. இதனை விரைவாக செயல்படுத்தினால்தான் இங்குள்ள விவசாயிகள் பெரிதும் பயன்பெறுவார்கள்.
இதேபோன்று பாலக்கோடு பகுதியில் ஜெர்தலாவ் கால்வாய் முதல் புலிகரை ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். மழைக்காலங்களில் காவிரியாற்றில் மிகையாக போகும் நீரை தருமபுரியிலுள்ள ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம் அ.தி.மு.க ஆட்சியில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அடுத்து ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின் அத்திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளபடவில்லை. ஆகவே நீர்ப் பாசனத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால் தருமபுரி செழிப்பான மாவட்டமாக மாறும்.
அ.தி.மு.க தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீது வேண்டும் என்றே திட்டமிட்டு தமிழ்நாடு அரசு பொய்வழக்குகளைப் பதிவு செய்து வருகிறது. இவ்வழக்குகள் அனைத்தையும் முறியடித்து அ.தி.மு.க வீறுகொண்டு எழும். தி.மு.க.வுடன் கைகோர்த்துக் கொண்டு, அ.தி.மு.க-வில் இருந்த சிலரின் துரோகச்செயல்களால் சென்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது. இப்போது அத்தகையவர்களை அடையாளம் கண்டுவிட்டோம். அ.தி.மு.க யாராலும் வீழ்த்த இயலாத இயக்கம் என்று அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), வே.சம்பத்குமார் (அரூர்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Post Views:
0