திருச்செந்தூர் கோவிலில்…. யானை வெள்ளை நிறத்தில் வீதி உலா…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!


ஆடி மாத சுவாதி நட்சத்திர தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் கோவிலில் யானை வெள்ளை நிறத்தில் வீதி உலா வந்ததை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.

ஆடி மாதம் சுவாதி நட்சத்திர தினத்தில் திருக்கைலாய மலையில் சிவபெருமான் ஐராவதம் முகத்தில் 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாருக்கு காட்சி கொடுத்தார் என்பது ஐதீகம். அதன்படி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெய்வானை யானையின் உடல் முழுவதும் அரிசி மாவு மற்றும் திருநீறு பூசப்பட்டது. அதன் பின்பு கோவிலிலிருந்து வெள்ளை நிறத்தில் தெய்வயானை யானையும், தங்க சப்பரத்தில் எழுந்தருளிய சுந்தரமூர்த்தி நாயனாரும் சன்னதி தெரு வழியாக 8 வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து மீண்டும் கோவிலுக்கு சென்றனர்.

இதனைத் தொடர்ந்து வெள்ளை நிற யானையின் பின்னால் உள்பிரகாரத்தில் 108 மகாதேவர் சன்னதி முன்பு சுந்தரமூர்த்தி நாயனாரும், சேரமான் பெருமாளும் தனித்தனி பல்லக்குகளில் எழுந்தருளி உலா வந்து மீண்டும் 108 மகாதேவர் சன்னதி முன்பு வந்தடைந்தனர். இதனை தொடர்ந்து வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனையடுத்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கடந்த 2 வருடங்களாக ஆடி சுவாதி நட்சத்திர தினத்தில் திருநீறு பூசிய தெய்வானை யானையும், சுந்தரமூர்த்தி நாயனாரும் கோவில் உள்பிரகாரத்தில் வலம் வந்தனர். தற்போது 2 வருடங்களுக்கு பிறகு வெள்ளை நிறத்தில் தெய்வானையும் சுந்தரமூர்த்தி நாயனாரும் வீதி உலா சென்றதை ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்தனர்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.