“காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி”…. ஒரே நாளில் 4 பதக்கம் வென்ற இந்தியா…. குவியும் பாராட்டுக்கள்….!!!!


22வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியானது இங்கிலாந்திலுள்ள பர்மிங்காமில் நடந்து வருகிறது. 4வது நாள் போட்டி முடிவில் இந்தியா 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கம் பெற்றிருந்தது. இதையடுத்து நேற்றைய 5-வது நாளில் இந்தியாவுக்கு மேலும் 2 தங்கம் உட்பட 4 பதக்கம் கிடைத்தது. லான் பவுல்ஸ் பந்தயத்தில் ரூபா ராணி , லவ்லி சவுபே, நயன்மோனி , பிங்கி சிங் போன்றோரை கொண்ட இந்திய பெண்கள் அணி தங்கம் வென்றது. டேபிள்டென்னிஸ் ஆண்கள் அணிகள் பிரிவில் சரத்கமல், ஜி.சத்யன் , ஹர்மித் தேசாய், சனில்ஷெட்டி போன்றோர் அடங்கிய அணி தங்கப் பதக்கம் பெற்றது. அதன்பின் பளுதூக்கும் போட்டியில் இந்தியவீரர் விகாஸ் தாக்கூர் ( 96 கிலோ ) வெள்ளி பதக்கம் வென்றார்.

பேட்மின்டன் போட்டியில் பி.வி‌.சிந்து, காயத்ரி கோபிசந்த், அஸ்வினி பொன்னப்பா , திரிஷாஜோலி , ஆகர்ஷி காஷ்யப், ஸ்ரீகாந்த் கிடாம்பி , சாத்விக் சாய்ராஜ் ரன்கிர் ரெட்டி , சுமித் ரெட்டி, லக்‌ஷயா சென் , சிராக் ஷெட்டி போன்றோர் அடங்கிய இந்திய அணியானது வெள்ளிப்பதக்கம் பெற்றது. நேற்றிரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் 1-3 எனும் கணக்கில் மலேசியாவிடம் தோற்றது. முதலாவதாக நடைபெற்ற இரட்டையர் ஆட்டத்தில் ரன்கிர் ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி 18-21, 15-21 எனும் கணக்கில் தோற்றனர். 2வது ஆட்டத்தில் பி.வி.சிந்து 22-20, 21-17 எனும் கணக்கில் யாங்கை வீழ்த்தினார். இதன் காரணமாக 1-1 என்ற சம நிலை ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ஸ்ரீகாந்த் கிடாம்பி 19-21, 21-6, 16-21 எனும் கணக்கில் தோற்றார்.

இதேபோன்று திரிஷா ஜோலி-காயத்ரி ஜோடியும் 18-21, 17-21 எனும்  கணக்கில் தோற்றனர். வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய பேட்மின்டன் கலப்பு அணிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளனர். ஜனாதிபதி தன் டுவிட்டர் பக்கத்தில் “காமன் வெல்த்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய கலப்பு அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன். திறமை, ஒருங்கிணைந்த செயல்பாடு, போராடும் குணம் வியக்கத்தக்க அடிப்படையில் இருந்தது” என அவர் குறிப்பிட்டுள்ளார். பின் பிரதமர் மோடி தன் டுவிட்டர் பதிவில் “இந்தியாவில் அதிகம் போற்றப்படும் விளையாட்டுகளில் பேட்மின்டனும் ஒன்று. காமன்வெல்த்தில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் வாயிலாக மேலும் பிரபலமடையும்” என குறிப்பிட்டுள்ளார். இந்திய அணியானது இதுவரையிலும் 5 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 13 பதக்கம் பெற்று தொடர்ந்து 6வது இடத்தில் இருக்கிறது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.