ஈரோடு மாவட்டத்தில் சென்ற சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் பகலில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இதையடுத்து நள்ளிரவு 11:45 மணியளவில் திடீரென்று இடி-மின்னலுடன் பரவலான மழைபெய்தது. இந்த மழை நள்ளிரவு 1 மணிவரை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக மாநகரில் தாழ்வான பகுதியில் மழைநீர் குட்டைபோல் தேங்கிநின்றது. இதேபோன்று மாவட்டத்தில் பல பகுதிகளிலும் நேற்று முன்தினம் மழை பெய்தது. ஈரோடு சூளை பாரதிபுரம் சாலையில் விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இதற்காக கழிவுநீர் சாக்கடை அடைக்கப்பட்டு, சிறிதளவு கழிவுநீர் போக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நேற்றுமுன்தினம் இரவு பெய்த மழையால் மழை நீா், கழிவு நீர் ஓடையில் கலந்து பெருக்கெடுத்து ஓடியது. பாரதி புரம் பகுதியில் சாக்கடை அடைக்கப்பட்டு இருந்ததால் அதனையொட்டிய 15-க்கும் அதிகமான வீடுகளில் மழைநீரும், கழிவு நீரும் சூழ்ந்தது. திடீரென்று சூழ்ந்த வெள்ளத்தால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கையானது பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாநகராட்சி இளநிலை பொறியாளர் சரவணன் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொக்லைன் எந்திரம் வாயிலாக பணியை தொடங்கி தண்ணீர் வெளியேற நடவடிக்கை மேற்கொண்டனர். அதுமட்டுமின்றி ஈரோடு வ.உ.சி. பூங்கா பகுதியில் செயல்பட்டு வரும் காய்கறி மார்க்கெட்டில் தண்ணீர் தேங்கிநின்றது. இதனை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Post Views:
0