ஈரோடு மாவட்டத்திலுள்ள நசியனூர் பெருமாபாளையம் பகுதியில் பள்ளிபாளையம் கிழக்கு வீதியில் சாலை புறம்போக்கு நிலத்தில் சிலர் வீடு கட்டி வசித்து வந்தனர். இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்நிலையில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதுமட்டுமின்றி வீடுகளை அகற்றிக் கொள்ள 6 மாத கால அவகாசமும் வழங்கப்பட்டது. எனினும் 6 மாதம் கடந்த பிறகும் வீடுகளை அகற்றவில்லை.
இதனையடுத்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வருவாய்த்துறை மற்றும் நில அளவையாளர்கள் அளவீடு செய்து வீடுகளை நேற்று பொக்லைன் எந்திரம் வாயிலாக அகற்றும் பணியில் ஈடுபட்டார்கள். அப்போது வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், அனைவருக்கும் மாற்றுஇடம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
இதனிடையில் வருவாய்த்துறையினர் 15 பேருக்கு மட்டுமே மாற்று இடம் வழங்க முடியும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் வீடுகளை அகற்றவிடாமல் பொக்லைன் எந்திரம் முன் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களில் ஒருவர் பொக்லைன் எந்திரத்தின் சக்கரம் முன்பே படுத்துக்கொண்டார். இதனால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 200-க்கும் அதிகமான காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து வேனில் ஏற்றினார்கள். இச்சம்பவம் நசினூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Post Views:
0