நெல்லையில் நேற்று காலை முதல் மதியம் 2 மணிவரை வெயில் வாட்டி வதைத்தது. இதையடுத்து 2:30 மணியளவில் திடீரென்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின் 3 மணியளவில் சாரல் மழை தூவியது. 3:5 மணிக்கு இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ய தொடங்கியது. அதாவது நெல்லை சந்திப்பு, டவுன், வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை பகுதிகளில் 1 மணிநேரம் இடைவிடாது மழை கொட்டித்தீர்த்தது. இந்நிலையில் மழைநீர் சாலை, தெருக்களில் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் தாழ்வான பகுதிகளில் மழை தண்ணீர் தேங்கியது. நெல்லை டவுன் மார்க்கெட் பகுதி, சந்தி பிள்ளையார் கோயில் பகுதி போன்ற இடங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கியது. இதனிடையில் மார்க்கெட்டில் தேங்கிய தண்ணீரில் நடந்து சென்று பொதுமக்கள் பொருட்களை வாங்கிச் சென்றனர். இதேபோன்று நெல்லை சந்திப்பு பகுதியிலும் மழைநீர் தேங்கி கிடந்தது. அத்துடன் சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ்பகுதியில் குளம்போல் தேங்கிய தண்ணீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றது. இந்த நிலையில் வாகனங்களில் சென்றவர்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றனர்.
மழைபெய்த போது பாளையங்கோட்டை புது பேருந்து நிலைய பகுதியில் 1 மணி நேரத்திற்கு மேலாக திடீரென்று மின்சாரம் தடைபட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதற்கிடையில் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு, அண்ணாநகர் ஆகிய இடங்களில் சாரல் மழை தூறிக்கொண்டே இருந்தது. இதேபோன்று நெல்லை மாவட்டத்தில் சேரன்மாதேவி, நாங்குநேரி, பாபநாசம், மணிமுத்தாறு, மூலைக்கரைப்பட்டி, ரெட்டியார்பட்டி, பேட்டை, சுத்தமல்லி, கல்லூர் போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
The post நெல்லை: வெளுத்து வாங்கிய மழை…. சிரமப்பட்ட வாகன ஓட்டிகள்…..!!!! appeared first on Seithi Solai.