சென்னையில் அமர் சேவா சங்கத்தின் 40-வது ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டார். அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம், கடந்த 1981-ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பள்ளியை முதன் முதலில் தொடங்கி மகத்தான சேவை செய்து வரும் அமர்சேவா சங்கத்தின் தலைவர் ராமகிருஷ்ணன் செய்து வரும் பணி மிகவும் மகத்தானது என்றார். கடந்த 1992-ஆம் ஆண்டு சங்கத்தில் சேர்ந்த சங்கரராமன் தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர். இவருடைய கவனத்தில் இன்று ஏராளமான குழந்தைகள் இருப்பது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. தமிழக அரசு ஒருங்கிணைந்த கல்வி வளர்ச்சி திட்டத்தின் படி அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி என்ற இயக்கத்தை தொடங்கி, அதனுடன் 3 வயது முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகள் கல்வி கற்பதற்கும் ஒரு திட்டத்தை தொடங்கியுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளி சிறுவர்-சிறுமிகளை உடல்கல்வி, விளையாட்டு கல்வி, திறன் மேம்பாடு, பெண் கல்வி, தரமான கல்வி போன்றவற்றில் ஈடுபடுத்த இருக்கிறோம். நம்முடைய இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் தான் மாற்றுத்திறனாளிகளுக்காக ஏராளமான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அமர்சேவா சங்கத்தின் மூலமாக மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு வேண்டிய அனைத்து உதவிகளும் கிடைக்கும் என்பதற்கு நான் உறுதி அளிக்கிறேன் என்றார். இதனையடுத்து தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவதற்கு வேண்டிய அனைத்து திட்டங்களையும் அரசு செய்து வரும் நிலையில், குழந்தைகளுக்கான கல்வி வளர்ச்சியை கருத்தில் கொண்டு அதற்கான திட்டங்களையும் வகுத்து வருகிறது.
இந்த குழந்தைகளுக்கு நல்ல கல்வி அளிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களை ஒரு நல்ல குடிமகனாக மாற்ற வேண்டும் என்பதற்காக அவர்களுக்கான சிறப்பான சூழ்நிலைகள் உருவாக்கிக் கொடுக்கப்படுகிறது. மேலும் இல்லம் தேடி கல்வி, கல்லூரி கனவு, நான் முதல்வன், இல்லம் தேடி மருத்துவம் போன்ற திட்டங்கள் மூலமாக மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து வருவதோடு, மாற்றுத்திறனாளிகளுக்கும் குழந்தை பருவம் முதல் அனைத்து விதமான உதவிகளும் செய்யப்படும் என்றார். தமிழகத்தில் அமர்சேவா சங்கம் 4 மாவட்டங்களில் மட்டும் செயல்பட்டு வரும் நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் என்று கூறினார்.
Post Views:
0