நான்தான் பொருளாளர்….. வங்கி கணக்குகளை முடக்குங்க….. ஓ பன்னீர்செல்வம் அதிரடி கடிதம்….!!!


அதிமுக வங்கி கணக்குகளை முடக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கு ஓ பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஓ பன்னீர் செல்வத்துக்கும் இடையே மோதல் முற்றியதை தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். கடந்த 11ஆம் தேதி நடந்த பொது குழுவில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அதிமுகவின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டார். ஏற்கனவே பொருளாளராக இருந்த ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டன.

பொதுக்குழு நடைபெற்ற சமயத்தில் அதிமுக தலைமை கழக அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே போராட்டம் வெடித்தது. இதையடுத்து அதிமுக அலுவலகத்தை வருவாய் துறையினர் மூடி சீல் வைத்தனர். இதைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அதிமுக அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிச்சாமிடம் ஒப்படைக்கும்படி கோர்ட் உத்தரவிட்டது.

இந்நிலையில் கரூர் வைசியா, ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கி கணக்குகளை குறிப்பிட்டு தற்போது அதிமுகவின் வங்கி கணக்குகளை முடக்க வேண்டும் என்று இந்தியன் ரிசர்வ் வங்கிக்கு ஓ பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குனருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் “அதிமுகவின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்வு செய்யப்பட்ட முறை அதிமுகவின் சட்ட விதிகளுக்கு எதிரானது. கடந்த 15 ஆண்டுகளாக அதிமுகவின் பொருளாளராக நான் தான் இருந்து வருகிறேன். மேலும் அதிமுக செயற்குழு, பொதுக்குழு தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின் படி இன்று வரை நான் தான் ஒருங்கிணைப்பாளர். எனவே வங்கி பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும்” என்று ஓ பன்னீர்செல்வம் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.