டேங்கர் லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 20 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டையில் இருந்து சிவகங்கை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்தை கிருஷ்ணன்(52) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ஆத்திபட்டி அருகே சாலையின் குறுக்கே சென்ற நாய் மீது மோதாமல் இருப்பதற்காக முன்னால் சென்ற டேங்கர் லாரி ஓட்டுநர் பிரேக் பிடித்துள்ளார். இதனால் பின்னால் வந்த அரசு பேருந்து டேங்கர் லாரி மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த ஜெயந்தி(54), கிருஷ்ணன்(52), முத்து(40) உள்பட 20 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த 20 பேரையும் மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Post Views:
0